ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல் கட்சிகள் சார்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்கிற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுகின்றன. அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் சார்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சிகள் அளித்துள்ள விவரங்கள் முறையே…
திமுகவிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி , சிற்றரசு, வெங்கடாச்சலம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் அலுவலரிடம் கொடுத்துள்ளனர்.
அமமுக சார்பில் டிடிவி தினகரன், சி ஆர் சரஸ்வதி ஆகியோரும், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்ட 40 பேர் மற்றும் நாம் தமிழர் சார்பில் சீமான், வியனரசு உள்ளிட்ட 20 பேர் கொண்ட பட்டியலை அளித்துள்ளனர்.
அதிமுக தரப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி, ஒ பன்னீர்செல்வம் என இருதரப்பிலும் இருந்தும் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், பெரியார் அம்பேத்கர் முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் சார்பாகவும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.