மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று 5-வது முறையாக 5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதி தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது மத்திய துருக்கியில் 2-வது நாளாக இன்று காலையில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று ஐந்தாவது முறையாக 5.7 ரிக்டர் அளவில் பூமிக்கு 46 கிலோ மீட்டர் ஆழத்தில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஒரே நாளில் 2300 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன. துருக்கியில் பலி எண்ணிக்கை 1500 ஆக உள்ளது. சிரியாவில் பலி எண்ணிக்கை 800 ஆக உள்ளது. இந்நிலையில் அதிதீவிரமான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகின்றன. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியா தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.