புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவர் அதே பகுதியில் கடை ஒன்றில் மீன் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் வியாபாரத்திற்கு மீன் வாங்குவதற்காக விடியற்காலை 3.30 மணி அளவில் கடலூர்-புதுச்சேரி சாலை கிருமாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து வழி மறித்து அவரிடம் இருந்த செல்போஃன், மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளி குர்மாத் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.
தனக்கு நடைபெற்ற வழிபறி குறித்து வடிவேல் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி- கடலூர் சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நான்கு இருசக்கர வாகனத்தில் 8 வாலிபர்கள் வழிபறி நடைபெற்ற நேரத்தில் அவ்வழியே சென்றது தெரியவந்தது இதனை அடுத்து அந்த இருசக்கர வாகனம் எண்ணை வைத்து புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த குமரகுரு, ரமணா, அர்ஜுன், பாலாஜி எழுமலை விஷ்ணு, ஜெயமூர்த்தி, விஜய் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கடந்த மாதம் தவளகுப்பம் பகுதியில் கோழி கடை ஒன்றை உடைத்து பணம் திருடியது மற்றும் அதே பகுதியில் தொடர்ந்து வழிபறியில் ஈடுப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அதே போல் இவர்கள் மீது புதுச்சேரி மங்கலம், வில்லியனூர், மடுகரை, தமிழக பகுதியான கடலூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து 10 வழிபறியில் ஈடுப்பட்டு வந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் இவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது, இதனையடுத்து 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் ஏற்கனவே உள்ளன.20 நாட்களில் திட்டம் போட்டு இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். தின செலவு, வழக்கு செலவு போன்றவற்றிக்காக இந்த குற்றவாளிகள் ஒன்று சேர்ந்து வழிப்பறியை எல்லை பகுதியில் நடத்தி வந்துள்ளனர். சிக்குவதற்கு ஆதாரம் இல்லாமல் தப்பித்து வந்த இவர்கள் ஒரே ஒரு சிசிடிவி காட்சியால் இன்று சிறையில் சிக்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.