0 0
Read Time:19 Minute, 42 Second

8 முனைப் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு பின்னர் தற்போது 4 முனைப் போட்டியாக சுருங்கியுள்ளது. தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் அறிவித்த பரபரப்பு அடங்குவதற்குள், ஈரோடு கிழக்கு தொகுதி போட்டியிலிருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தாண்டி, அதிமுக உட்கட்சி பிரச்சனையை இந்த தேர்தல் களம் எந்த கோணத்தில் எடுத்துச் செல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புதான் அதிகம் இருந்தது. அதிமுக உட்கட்சி பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்தலில் பரபரப்புகளுக்கும், அதிரடி திருப்பங்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே அரசியல் அனல் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீசிக் கொண்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் திமுக கூட்டணி, அதிமுக இபிஎஸ் அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக, என 8 முனைப்போட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத அதிரடி திருப்பங்களால் திமுக கூட்டணி, அதிமுக இபிஎஸ் அணி, நாம் தமிழர், தேமுதிக என நான்கு முனைப்போட்டியாக தேர்தல்களம் திரும்பியிருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணி சார்பில் கடந்த முறை காங்கிரசே களம் இறங்கியது. அப்போது அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின்னர் சந்திக்கும் முதல் இடைத் தேர்தல் என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவே களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த யூகங்களுக்கு விரைவிலேயே முற்றுப்புள்ளி வைத்து காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது திமுக. திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த டிசம்பர் மாதம் 24ந்தேதி டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து மநீம வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வாயிலாக திமுக கூட்டணியில் இணையும் என்கிற யூகங்கள் வலுவடைந்தன. அந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து போட்டியிலிருந்து விலகியுள்ளது மநீம.

அதிமுக கூட்டணி சார்பில் கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இபிஎஸ் அணியினர் சந்திப்புக்கு பின்னர் அதிமுகவிற்கே தொகுதியை விட்டுக்கொடுத்தது. இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை களம் இறக்கப்போவதாக இபிஎஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே நாங்களும் வேட்பாளரை களம் இறக்கி பலத்தை நிரூபிப்போம் என செய்தியாளர்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதே நேரம் பாஜக களம் இறங்கினால் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என ஓபிஎஸ் கூறியதால், இது இபிஎஸ் தரப்பிற்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் அணி பெயர் அளவிற்கு அளித்த ஒரு அறிவிப்போ என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் கடந்த 1ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்திகள் ஏற்படுத்திய பரபரப்பை மிஞ்சும் அளவிற்கு இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் போட்டி போட்டு வேட்பாளர்களை அறிவித்தன. எஸ்.எஸ்.தென்னரசுவை அதிமுக வேட்பாளராக இபிஎஸ் அறிவித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே செந்தில் முருகன்தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என அறிவித்தார் ஓபிஎஸ். அந்த நேரத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனையை சுற்றி சில கேள்விகள் எழுந்தன.

1.இரட்டை இலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் அணி ஆகிவற்றில் யாருக்கு கிடைக்கும்?

  1. இரட்டை இலை இரண்டு தரப்பில் யாருக்கும் கிடைக்காமல் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கி வைக்குமா?
  2. பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுமா?
  3. பாஜக இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது அல்லது போட்டியிடாமல் இருப்பது அதிமுக உட்கட்சி பிரச்சனையில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்?
  4. சமீபகாலமாக அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லும் போதெல்லாம் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த டிடிவி தினகரன் அதற்கேற்ப ஏதேனும் அதிரடி முடிவு எடுப்பாரா?

வேட்பு மனுதாக்கலுக்கான காலக்கெடு முடிவதற்குள் இந்த கேள்வி முடிச்சுகள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஒன்றால் அந்த சின்னம் முடங்காமல் தப்பித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் ஏ, பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை தமக்கே வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவில் அதிமுக வேட்பாளர் யார் என்று முடிவு செய்ய வேண்டும் என்று கூறியது. இந்த பணிகளை அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னின்று நடத்தி அதிமுக வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும், அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ்க்கு பெரும்பான்மை உள்ளதால் அவர் அறிவித்த எஸ்.எஸ்.தென்னரசே அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்தபடியே அவர் வேட்பாளராகியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி தமிழ்மகன் உசேன் எடுத்த முடிவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது அதிமுக உட்கட்சி பிரச்சனையில் இபிஎஸ் தரப்புக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எஸ்.எஸ்.தென்னரசு பெயர் தவிர வேறு யார் பெயரும் இடம்பெறவில்லை என்றும் தமிழ்மகன் உசேன் இந்த விஷயத்தில் பாரபட்சமாக நடந்துகொண்டார் என்றும் ஓபிஎஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இபிஎஸ் தரப்பிற்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வியூகமோ வேறுவிதமாக இருந்தது. தமது வேட்பாளர் செந்தில்முருகனை போட்டியிலிருந்தே விலகச் செய்தார் ஓபிஎஸ். இது அவருக்கு ஒரு வகையில் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் இந்த நடவடிக்கை மூலமும் சில அரசியல் நன்மைகளை அடைய முடியும் என்கிற வியூகமும் இந்த முடிவுக்கு பின்னால் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1.இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்ததாக இபிஎஸ் தரப்பு தம் மீது எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கலாம்.

  1. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டி வேட்பாளர் நிறுத்தியவர் என்கிற அவப்பெயரை தவிர்க்கலாம்.
  2. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.தென்னரசு, வெற்றிபெறும்பட்சத்தில் அந்த வெற்றிக்கான பெருமை முழுவதும் இபிஎஸ்க்கு சென்று சேர்வதை தடுக்கலாம்.

4.ஈரோடு கிழக்கில் களம் காணும் இரட்டை இலை சின்னத்தில் எங்களுக்கும் உரிமை உள்ளது என்பதை ஓபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்ட ஏதுவாக இருக்கும்

  1. அதிமுக அணிகள் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து அழைப்புவிடுத்து வரும் ஓபிஎஸ் அதற்கான முயற்சிகளுக்கு வலுசேர்க்கலாம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது வேட்பாளரை ஓபிஎஸ் வாபஸ் பெறச் செய்ததன் பின்னணியில் அவரது தரப்பில் மேற்கண்ட கணக்குகளும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த யூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் வார்த்தைகள் அமைந்தன. ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என அவர் கூறினார். இப்படி இபிஎஸ் அணி கேட்காமலேயே அவரது அணி வேட்பாளருக்கு பரப்புரை செய்ய ஓபிஎஸ் தரப்பு முன்வந்துள்ள ஒரு விநோதத்தை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் களம் சந்தித்துள்ளது.

இபிஎஸ் அணி தரப்பினர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவிற்கு ஆதரவு கேட்டும் அதற்கு உடனடியாக பாஜக பதில் சொல்லவில்லை. முடிவெடுப்பதில் தாமதம் ஆனது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக களம் இறங்கப்போகிறதா என்கிற பரபரப்பும் எழுந்தது. இந்நிலையில் டெல்லி சென்றுவந்த பின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்சை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆதரிக்கும் வேட்பாளரை வீழ்த்த அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பொன்னையன் உள்ளிட்டோர் பாஜகவை கடுமையாக விமர்சித்த பின்னரும், இபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் பாஜக ஆர்வமாக இருப்பதே ஈரோடு கிழக்கு தொகுதியில் அக்கட்சி களம் இறங்காததன் பின்னணியாக இருக்கலாம் என்கிற பார்வையும் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது.

ஓபிஎஸ் தமது வேட்பாளரை வாபஸ் பெறச் செய்த பரபரப்பு அடங்குவதற்குள் போட்டியிலிருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி அமோக வெற்றி பெற்று ஆளும் கட்சியாக அப்போது இருந்த அதிமுகவிற்கும், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவிற்கும் அதிர்ச்சி அளித்தவர்தான் டிடிவி தினகரன். ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னரே இளம் கிரிக்கெட் வீரரான சிவபிரசாந்தை வேட்பாளராக அறிவித்தார். இதன் மூலம் இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க டிடிவி தினகரன் ஏதோ அதிரடி வியூகம் வகிக்கிறார் என்று யூகிக்க முடிந்தது. வேட்பாளரை அறிவித்த கையோடு வீதி வீதியாக சென்று தங்களது வேட்பாளருக்கு அமமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக வேட்புமனுதாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடையும் கடைசி நாளில் போட்டியிலிருந்து அமமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் டிடிவி தினகரன். இந்த அறிவிப்புக்கு பின்னணியில் குக்கர் சின்னம் கிடைக்காததை காரணமாக கூறியிருக்கிறார். ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிட அமமுக விரும்பியது. ஆனால் அப்போது அந்த சின்னம் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. எனினும் பரிசு பெட்டி சின்னத்தில் களம் இறங்கியது அமமுக. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அமமுக களம் இறங்காததற்கு சின்னம் மட்டுமே ஒரு காரணமாக இருக்குமா என்கிற கேள்வியும் எழுந்தது.

அமமுக என்கிற தனிக் கட்சியை நடத்தி வந்தாலும் அதிமுக விவகாரங்களில் கருத்துச் சொல்ல டிடிவி தினகரன் தயங்கியதில்லை. சமீபகாலமாக அதிமுக அணிகள் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை தாமும் ஆமோதித்து வருகிறார். டிடிவி தினகரனை நேரில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறும் அளவிற்கு அவருடன் இணக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் இந்த தேர்தலில் களம் இறங்குவது உறுதியாகியுள்ள நிலையில் ஓபிஎஸ்சையடுத்து டிடிவி தினகரனும் தமது கட்சி வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் இருவரது வியூகமும் ஒரே புள்ளியில் இணைகிறதா என்கிற கேள்வி எழுகிறது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோருடன் இணைந்து மீண்டும் அதிமுகவில் பயணிக்கமாட்டேன் என்கிற முடிவில் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருந்தாலும், அதிமுகவை ஒன்றிணைப்பதில் ஓபிஎஸ், சசிகலா, பாஜக தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சிகளை டிடிவி தினகரன் வரவேற்று வருகிறார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில், போட்டியிலிருந்து அமமுக விலகியதன் பின்னணியில் அதிமுக ஒன்றிணைப்பும், அக்கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பதை தடுப்பதும் ஒரு காரணமாக இருக்குமா என்கிற விவாதமும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %