தரங்கம்பாடி, பிப்.13: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.
தரங்கம்பாடியில் ரூ.192 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க 1070 மீட்டா் தொலைவு, 15 அடி உயரம், 6 மீட்டா் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் சேதமடைந்தது. கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவா் மற்றும் கான்கிரீட் பாதையில் கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது. இதில், அந்த தூண்டில் வளைவு தடுப்புச் சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் பணியை தமிழ்நாடு கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் பணியை விரைந்து முடித்து மார்ச் மாதத்தில் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்களிம் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, தலைமை பொறியாளர் ராஜு, தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், மீனவ பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்