பிரபாகரன் 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்கமாட்டார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது.
இந்நிலையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும், மிக நலமுடனும் இருக்கிறார் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்கமாட்டார் என தெரிவித்துள்ளார். மகன் பாலச்சந்திரன் மரணித்த பிறகு, பிரபாகரன் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பிச் செல்லும் கோழை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரபாகரன் மரணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஈழப் போரில் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகளில் சிலர், தம்முடன் தொடர்பில் இருப்பதாகவும் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு எதுவும் இல்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.
மேலும், பிரபாகரன் உயிருடன் இருந்தால் நல்லது தான் அவரை பழ நெடுமாறன் காட்டினால் நானே நேரில் போய் பார்க்கிறேன் என கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.