பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். விபத்தில்லா கடலூர் மாவட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய ஆண்களுக்கான போட்டியை சிதம்பரம் நீதிபதி செம்மல், பெண்களுக்கான போட்டிைய மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சி.ஐ.டி.யு. மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடினர்.
பாரதிசாலை, பீச் ரோடு வழியாக சென்று கடலூர் சில்வர் பீச்சைஅடைந்தனர். இதில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.1000 வழங்கப்பட்டது. 5 முதல் 10-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் சி.ஐ.டி.யு. சிறப்பு தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலாளர் முருகன், தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநகராட்சி கவுன்சிலர் கிரேசி, மாநகர தி.மு.க.துணை செயலாளர் அகஸ்டின், பாட்டாளி தொழிற்சங்கம் ஜெய்சங்கர், ஒருங்கிணைப்பாளர்கள் மாயகிருஷ்ணன், பால்கி, அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.