மயிலாடுதுறை, பிப்ரவரி- 16;
மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாசாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் கோலாகலமாக தொடங்கியது.
துவக்க விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினருமான முனைவர்.மதிவாணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மூத்த பரத கலைஞர் பத்மஸ்ரீ லீலா சாம்சன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கௌரவ தலைவர் விஸ்வநாதன், தலைவர் பரணிதரன், அறக்கட்டளை அறங்காவலர்கள் மருத்துவர்.செல்வம், தொழிலதிபர்கள் அசோக், செந்தில்குமார், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் செல்வம், மயூரநாதர் ஆலய துணை கண்காணிப்பாளர் கணேசன், தொழிலதிபர்கள் குமரன், மாவட்ட விளையாட்டு ஆணையக்குழு உறுப்பினர் செந்தில்குமார். அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
முதல் நாள் நாட்டியஞ்சலி விழாவில் மூத்த பாரத கலைஞர் பத்மஸ்ரீ லீலா சாம்சன் கலைப்பணிகளை பாராட்டி “மணிமேகலை பொற்சதங்கை” விருதும், பரதநாட்டிய கலைஞர் ராம கௌதன்யாவுக்கு “இளம் மயூர நர்த்தன இளவரசு” விருதும், வளரும் நாட்டிய கலைஞர் அதிதிக்கு “இளம் மயூர நாட்டியதாரகை” விருதம் வழங்கப்பட்டது.
இதே போல, நாதஸ்வர கலைஞர்கள் கிருஷ்ணகுமார், கார்த்திக் ஆகியோருக்கு “மயூர நாதஸ்வர இளவல்” விருதும், தவில் இசை கலைஞர்கள் செல்வம் மற்றும் சுமன் ஆகியோருக்கு “மயூர தவிலிசை இளவரசு” விருதும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
பாண்டமங்கலம் சங்கீத கலா ரத்னா ஸ்ரீ கிருஷ்ணகுமார் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கிய முதல் நாள் நிகழ்வில் கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நாட்டிய கலைஞர்களின் பாரதம், ஒடிசி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
புதன்கிழமை தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு விதமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்