இதுகுறித்து அவர் கூறுகையில் ,
ஒரு மனிதனின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இறப்பு அனைவராலும் பேசப்படக் கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். அதனைப் போல ஈரோட்டில் ஒரு கிராமத்தில் பிறந்தாலும், நகைச்சுவை நடிகர் பல குரல் மன்னன் மயில்சாமி இலட்சியத்தோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரது பிறப்பு சாதாரணமானது தான் என்றாலும் சென்னையில் குடியேறி உணவகத்தில் வேலை பார்த்து அங்கே கிண்டல் கேலிக்கு ஆளாகி பிறகு வைராக்கியத்தோடு திரைத்துறையில் புகுந்து அந்த உணவகத்தின் வாசலிலேயே பிற்காலத்தில் இவருடைய படத்தின் சுவரொட்டி ஒட்டும் அளவிற்கு உயர்ந்தவர்.
அவரின் வலியை அவரே நன்கு உணர்ந்த காரணத்தினால் அடுத்தவருக்கு உதவுகின்ற எண்ணம் இயல்பாகவே மேலோங்கி திரைத்துறை மட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளில் தானும் முதல் நபராக களமிறங்கி உதவியவர். மனிதன் சக மனிதனை மதிக்க வேண்டும், போற்ற வேண்டும். அடுத்தவருக்கு இடைஞ்சல் தீங்கு செய்யவோ கொடுக்கவோக் கூடாது என்ற கொள்கையோடு பயணித்த மயில்சாமி,தீவிரமான ஆன்மீக ஈடுபாடு, சிவபெருமான் மீது பக்தி ஏற்பட்டு தன்னை முழுவதுமாக ஐக்கியமாக்கிக் கொண்டார். ஒரு மனிதனுக்கு பிடித்த விஷயத்தில் ஆழ்ந்து செல்கின்ற பொழுது அவ் விஷயமாகவே மாறிவிடுவார்கள் என்பது கோட்பாடு. அந்த எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப தான் மகா சிவராத்திரி அன்று சிவனையே நினைந்து நினைந்து நெஞ்சுருகி பக்தியோடு இருந்த காரணத்தினால் சிவபெருமானின் இடத்திற்கே மயில்சாமி சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மயில்சாமியின் மறைவால் அவர் படமாக மாறினாலும், அவரது செயல்பாடுகள் மனித குலத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, மனிதர்களுக்கு பாடமாக அமைந்தது என்பதே உறுதி. அவரைப் போல அடுத்தவருக்கு உதவுவோம், மகிழ்ச்சியான மனித வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வோம் என்பதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
இவ்வாறு கூறியுள்ளார்