கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் சென்னை ஓமந்தூரார் மருந்துவமனையில் இருந்து போர்நினைவு சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.
இதில், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ராணுவ வீரர் பிரபு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை பாஜக சார்பில் வழங்கப்படும். அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் பாஜக ஏற்கும். ராணுவ வீரரின் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும் என்று கூறினார்.
பேரணியை தொடர்ந்து பாஜக மாநிலை தலைவர் அண்ணாலை இரவு 7 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக ஆளுநரிடன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.