உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது.
இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், 11ஆவது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும் உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது.
இந்த உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
மார் ரூபாய் 25 கோடி செலவில் நடைபெறவுள்ள இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் ஜூலை 21 – 23 வரை மலேயா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.