கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியதை விசாரித்ததாகவும், எதிர் தரப்பினரது கருத்துகள் அனைத்தும் முழுமையாக கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டனர்.
உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமானது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதேபோல், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லுபடியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விரைவில் அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது.