ரயில்களில் கோச் பொசிஷன் என்று சொல்லப்படுகின்ற ரயில் பெட்டிகள் வரிசைப்படுத்துதல் அடிக்கடி மாறுதலுக்கு உட்படுத்தப்படுவது ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பேருந்து பயணத்தை தவிர்த்து பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவதால் அவசர அவசரமாக ரயில் புறப்படுவதற்கு சற்று முன்பு வருகின்ற பயணிகள் குறிப்பாக குடும்பத்துடன் வருகின்ற பெண்கள், பெரியவர்கள், தாங்கள் எடுத்து வருகின்ற லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு உரிய இருக்கைக்கான பெட்டி எங்கு உள்ளது என்றும், அதன் விபரம் தெரியாமல் அங்கும் இங்கும் அலைவதும் சில நேரங்களில் அந்த ரயிலிலேயே பயணிக்க முடியாமல் தவற விட்டுவிடக் கூடிய நிலையும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்கள் உருவாகிறது.
குறிப்பாக பொதுப் பெட்டியை பொறுத்தவரை ஒரு ரயிலின் எஞ்சினுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையிலான பெட்டிகள் ரயிலின் இருபுறமும் இணைக்கப்பட்டிருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் மைசூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வருகின்ற தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயிலின் இரு பகுதியிலும் பொதுப்பட்டி இணைக்காமல் பின்பகுதியில் மட்டும் இணைக்கப்படுவது பயணிகளுக்கு தெரியாமல் பெருத்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. பொதுப் பெட்டியை பொருத்தவரை அதனை பெரும்பாலும் ஏழைஎளிய மக்களே பயன்படுத்துகிறார்கள்.அவர்கள் ரயிலில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல சுமார் 10 நிமிடங்கள் பிடிக்கும். ரயில் நிற்பது வெறும் 2நிமிடங்கள் மட்டுமே என்பதால், பயணிகளை இங்கும் அங்கும் அலைக்காமல் நிரந்தரமாக அனைத்து ரயில்களிலும் இந்த இடத்தில்தான் பொதுப்பெட்டி இருக்கும், இந்த இடத்தில் தான் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்கின்ற நிரந்தர வரைபடத்தையும், விபரங்களையும் பயணிகளை சென்று செல்கின்ற வகையில் விளம்பரப்படுத்தி அதனை மாற்றாது கடைபிடித்து நடைமுறை படுத்த வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்..
இதன் மூலம் பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமம் மற்றும் அசௌரியம் குறையும். ரயில் நிலைய பிளாட் பாரங்களில் கோச் பொசிஷன் என்று அறிவிக்கின்ற நிலையும் இருக்காது. அவரவர்கள் கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்க வந்தாலும் கூட உரிய இடத்திற்கு செல்கின்ற ஒரு வாய்ப்பு கிட்டும் என்பது உறுதி. ஆகவே ரயில் பயணிகள் நலன் கருதி உடனடியாக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து உதவிட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.