0 0
Read Time:4 Minute, 19 Second

திருக்கடையூர் கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால் இங்கு 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம்.

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருக்கு செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார் வரவேற்றார். கோவில் சார்பில் தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சிவாச்சாரியார்கள் மாலை மரியாதை செய்து வரவேற்றனர்.

தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜைகளை செய்தார். பின்னர் அவர் நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார். ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். சிறப்பு ஹோமம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார். அதைத்தொடர்ந்து அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட அறங்காவல் துறை தலைவர் சாமிநாதன், துணை தலைவர் காஞ்சனமாலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் வருகையை ஒட்டி திருக்கடையூர் கோவில் பகுதியில் பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக துர்கா ஸ்டாலின் மேல பெரும்பள்ளத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் நடத்தி வழிபாடு செய்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %