0 0
Read Time:2 Minute, 47 Second

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 11வது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 11ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு கூடவுள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் அமைச்சரவை இன்று கூடுகிறது. மார்ச் 20ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், நிதி நிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. அதில், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ இரயில் திட்டம், தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கும் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம் பெறவுள்ளது.

பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிய ஆலோசனையை அமைச்சரவை மேற்கொள்ள உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.

ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யும் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், மீண்டும் சட்டத்தை இயற்றுவது குறித்தும் முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் செயலாற்றுவது குறித்த அறிவுறுத்தல்களை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். ஆய்வுக்கூட்டங்களில் பெற்ற கருத்துகள் அடிப்படையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த தனது கருத்துகளையும் முதலமைச்சர் முன்வைக்கவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %