என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை காவல்துறையை ஏவி நசுக்கும் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்களை சிறைவைத்துவிட்டு, டி.ஐ.ஜி. மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் போது, என்.எல்.சி. நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த 22 மாத கால விடியா ஆட்சியில் என்.எல்.சி.-யின் மக்கள் விரோதப் போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடலூர் மாவட்ட தி.மு.க. அமைச்சர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். கடலூர் மாவட்ட மக்களையும், விவசாயிகளின் நலனையும் மதிக்காத இந்த நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
என்.எல்.சி. நிறுவனத்தின் அடாவடித்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களின் குரல்வலையை தன்னுடைய ஏவல் துறையான காவல்துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சமாகும். பிரதமர், மரபு சாரா எரிசக்திகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவைகளைப் பெருக்குவோம். இதனால் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டிற்கான நிலக்கரித் தேவை குறையும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும்.
மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவது போல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்.எல்.சி. விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும். தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும். சமீப காலமாக, வாரந்தோறும் விடியா அரசின் அமைச்சரும், அதிகாரிகளும் விவசாயிகளை அழைத்து மிரட்டுவதை விட்டுவிட்டு, மத்திய அரசோடும், என்.எல்.சி. நிறுவனத்தோடும், வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மக்களோடும், சட்டப்படி குழு அமைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையைத் தீர்க்கவும், நிலங்களில் பணிபுரியக்கூடிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், அப்பாவி மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்கவும், உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.
எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையிலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.