மயிலாடுதுறை, மார்ச்- 13:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மீனவர் கிராம பிரதிநிதிகளில் ஆலோசனைக் கூட்டம் கடந்த 10-ஆம் தேதி தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, கீழ மூவர்கரை, வானகிரி உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் பழையாறு துறைமுகத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை கொண்டு மீன்பிடிப்பதை முழுவதுமாக தடை செய்ய வேண்டி அனைத்து மீனவ கிராமங்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக திங்கள்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதியை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி வலை மற்றும் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் குறித்த வீடியோ பதிவுகளை ஆட்சியரிடம் காண்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மீனவ கிராம பிரதிநிதிகளிடம் ஆட்சியர் உறுதியளித்தார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்