தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. மகளிர் பெரிதும் எதிர்பார்த்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000க்கான அறிவிப்றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். மேலும், இத்திட்டத்தினை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் எனவும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ம் தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். மறுநாள் புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபைக்கு விடுமுறை.
இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடக்கிறது. மார்ச் 23ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர். 24-ந்தேதி 2-ம் நாள் பட்ஜெட் மீதான விவாதம். 25, 26ம் தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை. 27ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம், 28ம் தேதி பட்ஜெட் மீது உறுப்பினர்கள் பேசிய விவாதத்திற்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கிறார். தொடர்ந்த ஒவ்வொரு துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.