ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் அலுவலராக செயல்பட்ட ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது.
திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதன் தேர்தல் அலுவலராக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். வேட்புமனுத் தாக்கல் முதல் வெற்றி அறிவிக்கப்பட்டது வரை சிவக்குமார் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் பல்லாவரம் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் இன்று சோதனை நடத்தினர். ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது.