நீரை வீணாக்கக் கூடாது என்றும், நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
உலக தண்ணீர் நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாம் உயிர்வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது தண்ணீர். இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும், தண்ணீரின் தேவை ஒருபோதும் மாறாது.
தமிழ் நிலமானது, தண்ணீரை பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொல்லியவர் திருவள்ளுவர். திருமந்திரம், தேவாரம், திருவாசகம் ஆகியன தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது.
குட்டை, குளம், ஏரி, ஏந்தல், கண்மாய், ஆறு, கடல் என நீர் நிலைகளின் அளவைப் பொறுத்து பெயர் வைத்தவர்கள் தமிழர். கடல் நீரை முந்நீர் என்றும், ஆற்று நீரை நன்னீர் என்றும், குடிநீரை இன்னீர் என்றும், குளிர்ந்த நீரை தண்ணீர் என்றும், நீரின் தன்மைக்கு ஏற்ப பெயர் வைத்த இனம், தமிழ் இனம். தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது தமிழ் பழமொழி.
நமது உடலின் அனைத்து செயல்பாடுகளும், முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். உணவின்றிகூட மனிதரால் பல நாட்கள் இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இன்றி இருக்க முடியாது.
இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது. பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும். புவி வெப்பமயமாகி வருகிறது. இதிலிருந்து நம்மை காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். தண்ணீரைக் காப்போம்! தாய்நிலத்தைக் காப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.