நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தல் முதற்கட்டமாக 124 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. கர்நாடக மாநில தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிவாரணம், வேலையில்லா டிப்ளமோ படித்த நபர்களுக்கு மாதம் ரூ.1,500 நிவாரணம், காலிப் பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி என அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிப்பதற்கு குறைந்தது 113 இடங்களை பெற வேண்டும். கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே வாக்கு செலுத்தும் விதமாக Vote From Home முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் 12 டி என்ற விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.
தற்போது கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் படி 124 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இப்பட்டியலில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களான தினேஷ் குண்டுராவ் காந்திநகர் தொகுதியிலும், டி.கே.சிவக்குமார் கனகபூரா தொகுதியிலும் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும் மற்றும் மல்லிகார்ஜுனா கார்கேவின் மகனான பிரியங் கார்கே சித்தாப்பூர் ரிசர்வ்டு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.