ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதையடுத்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்காட் பகுதியில் இன்று ஒரு நாள் முழுவதும் சங்கல்ப சத்யாகிரகம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவானது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து டெல்லி ராஜ்காட் பகுதியில் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.