மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் போலீஸ் சரகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 4-ந்தேதி காலை 11 மணியளவில் சிறுமி தனது குடும்ப ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த சிறுமியின் தந்தை, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமியிடம் பேஸ்புக் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் மாந்தோப்பு தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் ராமச்சந்திரன் (வயது 21) என்பவர் அறிமுகமாகியுள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு செம்பனார்கோவில் வந்த ராமச்சந்திரன், அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சிறுமியை அழைத்து சென்று தாலி கட்டியுள்ளார். பின்னர் சிறுமியை அவரது வீட்டிற்கு அனுப்பிவிட்டு, ராமச்சந்திரன் செங்கல்பட்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி செம்பனார்கோவில் வந்த ராமச்சந்திரன், ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மயிலாடுதுறை மகளிர் போலீசார் செங்கல்பட்டு சென்று ராமச்சந்திரனிடம் இருந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மயிலாடுதுறை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.
நிருபர்: யுவராஜ், மயிலை.