மயிலாடுதுறை- மார்ச்- 27;
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன் பேட்டை, நரிக்குறவர் காலனியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு, உறைவிட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் திவ்யா என்கிற பத்து வயது மாணவிக்கு இருதய பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டதில் அவருடைய தாயார் மாலா கடந்த 03.03.2023 அன்று மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.பி.எஸ்.கே திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் சென்னை எம். ஜி.எம் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகள் இருதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முகாம் மூலம் இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை தேர்வு செய்யப்பட்டு சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஐஸ்வர்யா அறக்கட்டளை நிதி உதவி மூலம் கடந்த 16.03.2023 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென வாழ்த்துக்கள் தெரிவித்தார். குழந்தையின் தாயார் மாலா அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி ஆகியோருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர்.குருநாதன் மற்றும் குழந்தையின் பெற்றோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்