ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இளம் தலைவர் ராகுல் காந்தியின் ஜனநாயக நடவடிக்கையை முடக்குவதற்காக மோடி செய்திருக்கின்ற சர்வாதிகார அராஜக மரபுகளுக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே மோடியின் மீது எதிர்ப்பு விழுந்திருக்கின்றது.
இந்தியாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல், ராகுல் காந்தியின் கடுமையான வழிகாட்டுதலின் அடிப்படையில், மகாத்மா காந்தி எப்படி இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக, அதே நேரத்தில் அழுத்தமாக போராட்டம் நடத்தினாரோ அதைப்போன்ற அமைதியான வழியை காட்டி இருக்கின்றார்.
அதன் முதல் கட்டமாக கடந்த 26ம் தேதி இந்தியா முழுவதும் அறப்போராட்டம்
நடைபெற்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இப்போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. வட்டார முதல் தேசிய அளவிலான போராட்டங்களை நடத்த இருக்கின்றோம்.
வருகின்ற 31ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள்
கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதில் ஐந்து போராட்டங்கள் குறித்தும் தமிழகம்
காங்கிரஸ் கட்சி அறிவிப்பு உள்ள போராட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட
உள்ளது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பது சர்வாதிகாரி மோடியின்
எண்ணம். ராகுல் காந்தி பேசினால் அதானி விஷயத்தை பேசுகின்றார். பொதுவெளியில் அதானி விஷயத்தை பேசினால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசினால் அதற்கு ஆளுங்கட்சி பதில் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் எந்த தொழிலதிபர்களுக்கும் கிடைக்காத சலுகைகள் எப்படி அதானிக்கு
மட்டும் கிடைக்கின்றது. நீங்கள் வெளிநாடு செல்லும் போதெல்லாம் அதானி உங்களுடன் வருவதற்கு காரணம் என்ன. அல்லது நீங்கள் சென்று வந்தவுடன் அந்த நாட்டிற்கு அதானி செல்வதற்கான காரணம் என்ன? வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து முதலீடுகளும் அதானிக்கு செல்வதற்கான காரணம் என்ன?
அதானியின் தொழில் முதலீட்டுகளில் சீனர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் அவருக்குமான தொடர்பு என்ன ? என கேள்வி எழுப்பிய அவர், அதானியின் 40% பங்குகள் குறைந்தும் கூட பி ,எப் நிறுவனத்தின் பணம் அதானியின் பங்குகள் மீது முதலீடு செய்யப்படுகிறது. ராகுல் காந்தி நாட்டின் மீது பொறுப்புணர்வோடு பேசுகின்றார். ஆனால் இதற்கெல்லாம் அரசாங்கத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியும் ஊழலும் நடந்துள்ளது. ஆருத்ரா நிறுவனம் சுமார் 2400 கோடி ரூபாய் அளவில் மிகப்பெரிய ஊழலை நடத்தியுள்ளது. இதில் அரசியல் இருக்கின்றது. ஒரு நிதி நிறுவனம் மட்டும் செய்திருக்கக் கூடிய ஊழல் அல்ல. இதற்குப் பின்னால் மத்திய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா இருக்கின்றது.
இந்திய அளவில் எப்படி ஊழலுக்கு பின்னால் பாரதிய ஜனதா இருக்கின்றதோ அதானிக்கு
பின்னால் எப்படி பாரதிய ஜனதா இருக்கின்றதோ ஆருத்ரா நிறுவனத்தின் நிதி
நிறுவனத்திற்கு பின்னால் தமிழக பாஜக இருக்கின்றது. தமிழக அரசின் தமிழக காவல் துறை பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாக அழைத்து விசாரணை செய்ய வேண்டும். அப்போது தான் இந்த மோசடி குறித்த உண்மை நிலை கிடைக்கும்.
குற்றவாளிகளின் புகலிடமாக பாஜக இருக்கின்றது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும் என தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் நிச்சயம் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.