தரங்கம்பாடி, ஏப்ரல்-01:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் தீர்த்த குளத்திலிருந்து சிறப்பு பூஜைகளுடன் கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள், சிவப்பு உடை உடுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு பக்தி பரவசத்துடன் தீமிதித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு மா விளக்கு போட்டு தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கரகாட்டம் நடைபெற்றது.
இதேபோல் இலுப்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் 23 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 23 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று வீரசோழன் ஆற்றில் இருந்து கரகம் சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் கோவிலை வந்தடைந்து தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு தீபமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து கண் கவரும் வானவேடிக்கைகள் விண்ணில் சீறிப்பாய்ந்த நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்