அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர் ட்ரம்ப்புடன், ரகசிய உறவு இருப்பதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், இவ்விவகாரத்தை பேசாமல் இருக்க நடிகை ஸ்டார்மிக்கு ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில், சட்ட ரீதியிலான செலவு என குறிப்பிடப்பட்டதால் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அமெரிக்க சட்ட விதிகளின் படி ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டொனால்ட் ட்ரம்ப்பின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடரும் என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து, நீதிமன்றத்திலிருந்து ட்ரம்ப் வெளியேறினார்.
இதனால் அமெரிக்காவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க வரலாற்றில், கிரிமினல் வழக்கில் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.