தரங்கம்பாடி, ஏப்ரல்- 12:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் நியாய விலை கடைகளுக்கு வந்திருந்த பொது மக்களிடம் அரிசி மற்றும் பருப்புகள் தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்டறிந்தார். மேலும் நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என வட்ட வழங்கல் அலுவலரிடம் உத்தரவிட்டார்.
தொடர்ந்து காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரத்தில் 95.புதிய வீடுகள் கட்டும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சுவர்களை தட்டி பார்த்து தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனை அடுத்து 42 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் காட்டுச்சேரி ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா,விஜயலட்சுமி, காட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் துறை சார் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்