தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் V.செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மது அருந்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை மருந்துகளை தவறான வழிகளில் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நான்கு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ரகசிய தகவலாளர்களுக்கான வெகுமதி தொகை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், எரி சாராயம், போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும் காவல் ஆளுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கான ஊக்கத் தொகை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு, இம்மாதம் முதல் 1,100 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாயும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், டாஸ்மாக் உதவியாளர்களுக்கான ஊதியத்தில் மாதந்தோறும் 840 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அதேபோல், தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தகுதியான 500 டாஸ்மாக் கடைகள் இந்த ஆண்டு மூடப்படும் என அறிவித்தார்.