கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜக இளைஞர் அணி தலைவர் அரவிந்த் சவுகான் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தனர். இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு, பாஜக தலைமை மீண்டும் சீட் வழங்கவில்லை என்று பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் பாஜகவில் இருந்து தொடர்ந்து பலர் விலகி வருகின்றனர். கர்நாடக முன்னாள் முதலமைச்சராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா, லட்சுமண் சாவடி என தொடர்ந்து பாஜகவின் பலமாக இருந்த பல பேர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து விலகினர். மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸில் ஐக்கியமாகினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கர்நாடக பாஜகவில் இருந்த நிர்வாகி, அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கல்புர்கி மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் அரவிந்த் சவுகான், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதனால் கர்நாடக பாஜகவில் கூடுதல் பரபரப்பு நிலவி வருகிறது.