ஐபிஎல் கிரிக்கெட் பள்ளித்தேர்வு காலத்தில் வேண்டாம்! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!
அவர் குறிப்பிடுகையில்,
உலகில் உள்ள முன்னணி கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய அணிகள் உருவாக்கப்பட்டு, ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் என்னும் பெயரில் ஆண்டுதோறும் 20 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் லீக் போட்டிகள் சர்வதேச தரத்தில் எழுச்சியோடு நடத்தப்பட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. அதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமாகவும் உத்வேகத்துடன் உருவாகி வருவதையும் நம்மால் உணர முடிகின்றது.
அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மாநிலங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர் மாணவிகளின் ஈர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நேரமும், பள்ளிக் கல்லூரிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் நேரமும் ஒன்றாக அமைவதால் கிரிக்கெட் விளையாடும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களுமே அப்போட்டிகளை நேரடியாகவோ தொலைக்காட்சியின் வாயிலாகவோ பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, வாழ்வின் ஆதார அடித்தளமான பள்ளிப்படிப்பை மறந்து தேர்வில் கவனம் செலுத்தாமல் தொலைக்காட்சியை பார்க்கின்ற சூழல் ஏற்படுவதை அன்றாடம் பல்வேறு வீடுகளில் உள்ள பெற்றோர்கள் கண்டு மிகவும் அதீத கவலையிலும் வேதனையிலும் உள்ளார்கள். பெற்றோர்களின் கவலையை உணர்ந்தும், கிரிக்கெட் மாணவர்களின் அதிக ஆர்வத்தை கருத்தில் கொண்டும் இரண்டுமே பாதிக்கப்படாத வண்ணம் எதிர்காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பள்ளிக்கல்லூரி தேர்வு காலங்களான மார்ச்,ஏப்ரல்,மே மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முன்வர வேண்டும்.
மிகப்பெரிய பொருளாதார பரிவர்த்தனை கொண்டுள்ள இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணையமும், அத்துறையைச் சார்ந்த அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி நல்லதொரு நடவடிக்கை மேற்கொண்டால் நிச்சயம் படிப்பும் பாதிக்காது, கிரிக்கெட் விளையாட்டும்மென்மேலும் வளரும் என்பது நிதர்சன உண்மை என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.