ஓசூர் அருகே தூத்துக்குடியில் இருந்து ராயக்கோட்டை வழியாக பெங்களூரு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயில் எஞ்சினில் இருந்து 3 முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கின. இதனால், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்லும் ரயில்களும், பெங்களூருவில் இருந்து சேலம் தருமபுரி, ஓசூர் வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களும், மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன.
அத்துடன், இன்று (21.4.2023) பின்வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- ரயில் எண்: 16212 சேலம்- யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ்
- ரயில் எண்: 06278 தருமபுரி – பெங்களூரு ரயில்
- ரயில் எண்: 06551 பெங்களூரு – ஜோலார்பேட்டை ரயில்
- ரயில் எண்: 06552 ஜோலார்பேட்டை – பெங்களூரு ரயில்
சில ரயில்கள் தருமபுரி – ஓசூர் வழித்தடத்திற்கு பதிலாக ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் – சேலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தடம்புரண்ட ரயில் பெட்டிகளை தூக்கும் பணி அதிகாலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.