சிதம்பரம் அருகே மணலூர் பகுதியில் பாசிமுத்தான் ஓடை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓடையை ஆக்கிரமித்து அப்பகுதி பொதுமக்கள் கூரை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் இங்கு வசித்த 9 குடும்பங்களிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக கூறி, வீடுகளை உடனே காலி செய்யக்கோரி நோட்டீசு கொடுத்தனர். அதற்கு அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டனர். அதன்பேரில் அதிகாரிகள் கால அவகாசம் அளித்தனர். இருப்பினும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் நீர்வளம், பொதுப்பணித்துறை பொறியாளர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாசிமுத்தான் ஓடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை தொடங்கினர். அப்போது அங்கு வசித்த மக்கள் தாமாகவே வீடுகளை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்துச் சென்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.