வேங்கை வயல் வழக்கில் மேலும் 10 பேருக்கு DNA பரிசோதனை செய்ய புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகளை கண்டறிவதற்காக, சந்தேகத்தின் அடிப்படையில் 11 பேருக்கு DNA பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில், எட்டு பேர் DNA பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், மேலும், 10 பேரிடம் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கும்படி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுவை பரிசீலித்த நீதிபதி சத்யா, புதிதாக பத்து பேருக்கு DNA பரிசோதனை செய்யும்படி, சென்னை பகுப்பாய்வு மையத்திற்கு பரிந்துரைத்தார். மேலும், சேகரிக்கப்பட்ட மூன்று பேரின் ரத்த மாதிரிகளை DNA பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.