தரங்கம்பாடி, மே- 01:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை ஓரம் அமைந்துள்ள டேனிஷ் கோட்டையில் ஓசோன் மாரத்தான் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் .முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது.
கலாச்சார பாரம்பரிய நகரமான தரங்கம்பாடி பல்வேறு சுற்றுலா வசதிகள் கொண்டது டேனிஷ் வர்த்தக நிலையமாக விளங்கிய தரங்கம்பாடி ஒரு கடற்கரை நகரமாகும். இங்கு அமைந்துள்ள டேனிஷ் கோட்டை 1620 ஆண்டு டேனிஷ் கட்டடக்கலை அம்சங்களை கொண்டு கட்டப்பட்டது . டேனிஷ் கலாச்சார பாரம்பரிய நகரமான தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் மூன்று கோடி செலவில் மேம்படுத்த படும் என அறிவித்துள்ளார்கள்.
உலக சுற்றுலா தளத்துக்கு இணையாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மூன்று கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஓசோன் விழிப்புணர்வு மாரத்தான் நடத்துவதன் முக்கிய நோக்கமே பொதுமக்கள் இயற்கை காற்றுகளை சுவாசிக்க வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு டேனிஷ் கோட்டையில் நானும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாபெரும் தூய்மை பணியை தொடங்கி வைத்தோம்.
மாரத்தான் போட்டியில் 1500 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டது மகிழ்ச்சியான செய்தியாகும். வரக்கூடிய காலங்களில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உலக சுற்றுலா தளத்துக்கு இணையாக கொண்டு வரப்படும் எனவும். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டேனிஷ் கோட்டையை சுற்றியும் தரங்கம்பாடி கடற்கரை ஒட்டி உள்ள பகுதியில் முழுமையான சுகாதாரமான நகரமாக மாற்றுவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்க வந்துள்ள மாணவர்களின் பரதநாட்டியம் மிகவும் அற்புதமாக இருந்தது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பேரூராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பிரும் தரங்கம்பாடி மீன் பிடி துறைமுகத்தில் 120 கோடி செலவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்குமார், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், பேரூர் கழக செயலாளர் முத்துராஜா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்