0 0
Read Time:8 Minute, 42 Second

சென்னை (மயிலாடுதுறை), மே- 15:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பண்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மீனவ மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முதற்கண் என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி பேசுகிறேன் சார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ரூ120 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவ சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன்பிடி துறைமுகமானது 800 சிறிய மீன்பிடி படகுகளும் 225 விசைப்படகுகளும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இத்துறைமுகமானது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைப்பதற்கும் பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் கையாள்வதற்கும் ஏற்றார் போல் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கு மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் புதியதாக கட்டப்பட்டுள்ள தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை தங்களது திருக்கரங்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், மீனவ சமுதாய மக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 315 கோடிக்கு மேல் பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளார். அந்த வகையில் மயிலாடுதுறை தரங்கம்பாடியில் 120 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை காணொளி காட்சிகளாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். தமிழக அரசு மீனவர் நலம் காக்கும் அரசாக செயல்படுகிறது. தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய இரண்டு இடங்கள் மிக முக்கியமான இடங்களாகும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் ரூ.3 கோடியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, ரூ.4 கோடியில் அருங்காட்சியகம் புனரமைக்கும் பணி, ரூ.3 கோடியில் தரங்கம்பாடி கவர்னர் மாளிகை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை உலக சுற்றுலா தளத்திற்கு இணையாக மிக விரைவில் உருவாகும். தரங்கம்பாடி பேரூராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பூம்புகார் சுற்றுலா தளம் ரூ.23.06 கோடி செலவில் உலக சுற்றுலா தளத்திற்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரங்கம்பாடி துறைமுகம் மேம்படுத்தப்பட்ட துறைமுகமாக உருவாகும். தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றோம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் சார்பில் செந்தில்குமார் மீனவர் நன்றி தெரிவித்து பேசியதாவது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது பணிவான வணக்கம். எங்க கிராமத்தில் அமைய பெற்றுள்ள மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம், படகு பழுதுபார்க்கும் கூடம் ஆகியவை இங்கு அமையப் பெற்றுள்ளது. நாங்கள் முன்பெல்லாம் 40 கிலோமீட்டர் தூரம் சென்று தான் படகு பழுது பார்க்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. அதேபோல மீன்களை சாலையில் வைத்து தான் விற்றுக் கொண்டிருந்தோம். அந்த நிலை மாறி எல்லா வசதிகளும் இந்த துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ளது. எங்கள் கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கும் எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள 10 கிராமத்தைச் சார்ந்த 18 ஆயிரம் மீனவர்கள் இந்த மீன்பிடி துறைமுகத்தின் மூலம் பயனடைவார்கள் இந்த மீன்பிடி துறைமுகத்தை தங்களது பொற்கரங்களால் திறந்து வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் கிராமத்தின் சார்பாகவும், எங்கள் சமூகத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், குத்தாலம் ஒன்றிய குழுத் தலைவர் மகேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணசங்கரி குமரவேல், மீன்வளத் துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்னபூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்தாலம் பி.கல்யாணம், ஜெகவீர பாண்டியன், சித்திக், பால அருட்செல்வன் ஒன்றிய செயலாளர்கள் எம் அப்துல் மாலிக் அமிர்த விஜயகுமார் முருகமணி தரங்கைப் பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவ தலைமை கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %