கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும்போட்டி நிலவியது.
இருவரும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த மூன்று நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்க உள்ளதாகவும், பெங்களூருவில் நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.