திமுக அரசை கண்டித்து வரும் 20 ஆம் தேதி பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். செங்கல்பட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
பின்னர் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக தமிழ்நாடு அறிவித்தது. மேலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையையும், அவற்றால் ஏற்படும் மரணங்களையும் தமிழ்நாடு அரசு தடுக்க தவறியதாக குற்றம்சாட்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வரும் 20 ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
”தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும், அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை பாஜக மகளிர் அணியினர் முன்நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.