சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றார். இரு நாடுகளிலும் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், பல்வேறு தொழிற்சாலைகளையும் பார்வையிட்டார். இந்த பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஒன்பது நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில், 3,233 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறினார். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும்படி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், செங்கோலை பிரதமர் வாங்கிய நாளிலேயே, அது வளைந்து விட்டதாக விமர்சித்த அவர், மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதே செங்கோல் வளைந்ததற்கு சாட்சி என தெரிவித்தார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் ஆகியோர் இன்று தம்மை சந்திக்கவிருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.