0 0
Read Time:4 Minute, 14 Second

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக மூன்றாவது நீதிபதி நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்க உள்ளார்.

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது, செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

அதில், நீதிபதி ஜெ. நிஷா பானு “ மேகலாவின் மனு விசாரணக்கு உகந்ததே. அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என தீர்ப்பளித்தார்.

ஆனால், நீதிபதி பரத சக்ரவர்த்தி ”நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என தீர்ப்பளித்தார்.

தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மூன்றாவதாக யார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒரு நீதிபதியை நியமிப்பார். அவ்வாறு நியமிக்கப்படும் மூன்றாவது நீதிபதி தனியாக இந்த வழக்கை விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா இன்று உத்தரவிட்டார். இந்நிலையில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %