தரங்கம்பாடி, ஜூலை-10: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழை அச்சு வடிவில் கொண்டு வந்த முதல் முதலில் கொண்டு வந்த வெளிநாட்டவர் சீகன்பால்கு 317 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தரங்கம்பாடியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ் சீகன் பால்கு வந்த நாளான நேற்று அவரைப் போற்றும் வகையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கிருஸ்துவ மதத்தைப் பரப்பும் வகையில் சீகன்பால்கு டென்மார்க் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கி.பி. 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். ஆனால் அவர் தமிழ் மொழியை உணர்ந்து தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் எழுத்து வடிவில் எடுத்துரைக்க தமிழ் மொழியை கற்றுக்கொண்டு எழுதவும், படிக்கவும், சரளமாகத் தமிழில் பேசவும் செய்தார். 1715-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம கொண்டு வந்து. தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டணத்தில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் இயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துக்கள் தயாரிக்கும் கூடத்தை அமைத்து தமிழ் அகராதிகளை கொண்டு வந்தவர் ஆவார். இவற்றின் மூலம் சீகன்பால்குவே இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் பைபிளை (புதிய ஏற்பாடு) காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார். அதன்பின், தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்.
தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, இந்து சமயக் கடவுள்களின் வரலாறு போன்ற நூல்களையும் படைத்திருக்கிறார். இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருப்பதற்கு சீகன்பால்கு ஆவார்.
ஜெர்மனியில் உள்ள ‘ஹால்வே’ பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவுவதற்கும் இவர் பெரும் பங்காற்றியிருக்கிறார். தமிழர்களுக்கு கல்விக் கூடங்கள் அமைத்து இந்தியாவில் பெண்களுக்கென தனியாக முதல் பள்ளிக்கூடத்தை தொடங்கினார். ஆசியாவிலேயே முதல் தேவாலயமான புதிய எருசேலம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-இல் அமைத்திருக்கிறார். 1719-இல் உயிரிழந்தார்.
சீகன்பால்குவின் உடல், தரங்கம்பாடி புதிய எருசேலம் ஆலயத்தின் பலிபீடம் முன்பு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது நினைவு தினத்தையொட்டி புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி,மாலைகள் அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் தரங்கை பேராயர் ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் கலந்துகொண்டு சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சீகன்பால்கு தமிழில் மொழி பெயர்த்த பைபிளை “கையெழுத்து வேதாகம சாதனை” என்ற பெயரில் இரண்டு மணி நேரத்தில் 1200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் 31,102 வசனங்களைக் கொண்ட 1464 பக்கங்களை எழுதி சாதனை படைத்தனர்.
இந்த சாதனை நிகழ்ச்சியை துவங்கி வைத்த தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை பேராயர் கிறிஸ்டியான் சாம்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :-
தமிழறிஞர் சீகன்பால்கு வருகை தந்த 317 வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. அவர் வருகையை நினைவு கூறும் வகையில் சீகன்பால்கு தமிழில் மொழி பெயர்த்த பைபிளின் தமிழ் மொழியாக்கத்தை கையெழுத்து வேதாகம சாதனை நிகழ்ச்சியாக 2 மணி நேரத்தில் 1464 பக்கங்களை 1200 க்கும் மேற்பட்ட நபர்கள் எழுதி சாதனை படைத்தனர். 1715 ல் சீகன்பால்கு தமிழில் அச்சடித்த பைபிளின் ஒரு பிரதி தஞ்சாவூர் மியூசியத்தில் இருந்து களவாடப்பட்டு லண்டன் மியூசியத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது.
யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி அந்த பைபிளை தமிழகத்திற்கு விரைவில் கொண்டு வந்து சீகன்பால்கு வாழ்ந்த அவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரங்கம்பாடி சீகன்பால்கு மியூசியத்தில் வைக்க வேண்டும்,
சீகன்பாகுவின் நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், 1986 ல் நிறுத்தப்பட்ட தரங்கம்பாடி- மயிலாடுதுறை ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என்று பேராயர் வேண்டுகோள் விடுத்தார்.
இதில் தரங்கம்பாடி புது எருசலேம் ஆலயம் சபைகுரு சாம்சன் மோசஸ், தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார்,பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன், சபைகுருமார்கள் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்