பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும், இது இந்தியாவுக்கே பெருமை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, ஓர்லி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். பின்னர் பொருளாதாரம், வர்த்தகம், எரிசக்தி, சுற்றுச்சூழல், கல்வி, டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து பாரிசில், இந்திய வம்சாவளி சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் பாரத் மாதா கீ ஜெய் என முழுக்கம் எழுப்பினர். இதையடுத்து பேசிய பிரதமர், வெளிநாட்டில் இதை கேட்பது, சொந்த வீட்டில் இருப்பதை போல் உணர்வதாக கூறினார். ஐநா வெளியிட்ட அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளில், இந்தியாவில் சுமார் 42 கோடி மக்கள், வறுமைக் கோட்டிற்கு வெளியே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது ஒட்டு மொத்த ஐரோப்பா மற்றும் அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம் என்றும் தெரிவித்தார். உலகின் பழமையான மொழி தமிழ் என்பது இந்தியாவின் பெருமை என்று குறிப்பிட்ட பிரதமர், பிரான்ஸ் நாட்டில் திருவள்ளூவர் சிலை நிறுவப்படும் என்றும் உறுதி அளித்தார்.