0 0
Read Time:3 Minute, 2 Second

ஏழை – எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் லா அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நீதியரசர் சந்துரு, நடிகர் சூர்யா, ஜெய் பீம் திரைப்பட இயக்குநர் தா.சே.ஞானவேல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்க பதிவில் இது குறித்து கூறியுள்ளதாவது:

சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் லா அகாடமியைத் தொடங்கி வைத்தேன்.

இதில், ஏழை – எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

நீதியரசர் சந்துருவோடு, ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் தா.சே.ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %