பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான போர் அல்ல இது; இந்த போர் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையேயானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்த பிறகு அனைத்து கட்சியினரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
“இந்தியாவின் மதச்சார்பின்மை மீது பாஜக கூட்டணி அரசு கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது; இந்தியாவிற்கு எதிராக யார் நின்றாலும் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இது பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான போர் அல்ல; இந்த போர் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையேயானது.தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போர் இது; பாஜகவின் சிந்தனைக்கு எதிரான போர் இது இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.