0 0
Read Time:4 Minute, 18 Second

கடலூரில், ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 4 மாவட்ட செயலாளர் கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து இருப்பதையும், இதை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. தாமோதரன், செல்விராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன், மீனவரணி தங்கமணி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சி.கே.எஸ். கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

மின் கட்டணம் உயர்வு:

காவல்துறை, நீர்வளத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறைகளிலும் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை, வணிக வளாகத்திற்கு பல மடங்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

இதனால் தொழிற்சாலைகள், குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நெஞ்சு நசுக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தால் எப்படி முதலீட்டாளர்கள் வருவார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்தது. 14 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அப்படி இருக்கும் போது, ஏன் மின் தட்டுப்பாடு வருகிறது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதை எல்லாம் தடுக்க இந்த அரசு தவறி விட்டது. இவ்வாறு எம்.சி.சம்பத் பேசினார்.

மாவட்ட அவை தலைவர் சேவல்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி, பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், கந்தன், வினோத்ராஜ், முன்னாள் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன், வர்த்தக பிரிவு வரதராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, வினோத், மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன், நகர செயலாளர்கள் கோவிந்தராஜ், சந்திரகுமார் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %