தொடர் மழையால் மாணவர்கள் குடையுடன் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேசம், ஷாதோல் மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் வந்தனா வைத்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஷாதோல் மாவட்டத்தில் 2 நாட்களாகப் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஷாதோல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளியில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இது அரசு மேல்நிலைப் பள்ளியின் அவல நிலையை பிரதிபலிக்கிறது. காணொளியில் ஐந்து மாணவர்கள் குடையுடன் படிப்பதைக் காணலாம்.
இது குறித்து பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் ஆனந்த் ராய் சின்ஹா கூறுகையில், மாவட்டத்தில் இதுபோன்ற பல கட்டடங்கள் உள்ளன. அங்கு பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.பாழடைந்த கட்டடத்தில் குழந்தைகளை உட்கார வைக்கக்கூடாது என 2 நாட்களுக்கு முன் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறினார். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.