அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2-ஆயிரத்தை இந்த மாதமே தமிழக அரசு வழங்குகிறது. நடந்த முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த 7ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அதைச் சரிப்படுத்த கொரோனா நிவாரண நிதியாக ரூ 4,000 நிவாரண நிதியாக வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை இன்று மதியம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் 15ம் தேதியில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் ரூ.2,000 கொரோனா நிவாரண முதல் தவணை நிதி விநியோகம் தொடங்கப்படவுள்ளது.