மயிலாடுதுறை துலாக்கட்ட தரைத்தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும்பள்ளங்களை உடனே மூடிசீரமைத்து தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள்!
மயிலாடுதுறை காவிரி துலாக் கட்ட மண்டப தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கின்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.
மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரி கல்வி நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், பொதுமக்கள், காய்கறி,பழங்கள் வியாபாரம் செய்வோர் மற்றும் காவிரியில் புனித நீராட வரும் பக்தர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள். இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளிலும் செல்கின்ற பொழுது நிலைகுலைந்து கீழே விழுகின்ற அளவில் டைல்ஸ் கல் பெயர்ந்து பெரிய அளவிலான மேடு பள்ளங்கள் நிறைந்து இருக்கின்றது.
பொதுமக்களுக்கு அதிக பயன்பாடு மிக்க இப்பகுதி மயிலாடுதுறையில் முக்கிய வீதிகளை தவிர்த்து மாற்று வழி போக்குவரத்திற்கு மிகவும் அதிகமாக பயன்படக் கூடியதாகவும் உள்ளது. இப்பகுதியில் உள்ளத் தரைத்தளம் பழுது காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆகவே சிறிது மழை நேரங்களில் கூட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடும் ஏற்படும் என்பதால் பொற்கால அடிப்படையில் முக்கியமான துலா கட்டப்பகுதியான தரை தளத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்து முற்றிலுமாக கான்கிரீட் தளம் வைத்துத் தர வேண்டும் என்று மயிலாடுதுறை மக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் விரைவில் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் மற்றும் வள்ளலார் ஆலய கும்பாபிஷேகங்கள்நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அவர்கள் அனைவரும் துலாக்கட்ட காவிரியில் புனித நீராட வருவார்கள் என்பதனால் முன்னெச்சரிக்கையாக இப்பகுதி தரைத்தளத்தை சீரமைத்து சிரமம் இன்றி மக்கள் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.