நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக எதிர்கட்சிகளை சேர்ந்த பல்வேறு மக்களவை உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, திமுகவை சேர்ந்த கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்தை முன்வைத்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலர் பேசினர். இன்றோடு சேர்த்து கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இறுதியாக இன்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது எதிர்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் மோடி மொத்தமாக இரண்டே கால் மணி நேரம் பதிலுரை அளித்தார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க யாருமில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.இந்நிலையில் மக்களவை இன்று (ஆகஸ்ட் 11) காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.