செம்பனார் கோயில், ஆகஸ்ட்- 11:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
ரஜினி:- செம்பனார்கோயிலில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். பாகசாலை, கொண்டத்தூர் பகுதியில் மயான சாலை அமைக்க வேண்டும். சேமங்கலம், எருமல், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகசாலை ஊராட்சியில் பகுதிநேர அங்காடி கட்ட வேண்டும்.
மோகன்தாஸ்: செம்பனார்கோயிலில் கலைஞர் சிலை மற்றும் அவரது பெயரில் நூலகம் அமைக்க வேண்டும். கிடாரங்கொண்டான் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும். பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் டாக்டர்களை நியமிக்க வேண்டும். ராஜ்கண்ணன்: மடப்புரம் ஊராட்சி மண்மலை கிராமத்தில் மயான கொட்டகையும், சவுரியாபுரம்
கிராமத்தில் மயான சாலையும் அமைக்க வேண்டும்.
ஷகிலா அஜீஸ்: சங்கரன்பந்தல் கடைவீதியில் போக்குவரத்து இடையூராக உள்ள மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓலக்குடி கிராமத்தில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
தேவிகா: புத்தகரத்தில் மயான சாலை மற்றும் தார் சாலை அமைத்து, அங்கு சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.
முத்துலட்சுமி: ஆறுபாதி ஊராட்சியில் புதிதாக பகுதிநேர அங்காடி அமைக்க அனுமதி பெறப்பட்டும்,இதுவரை அமைக்கப்படவில்லை. அதனை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம்: சந்திரபாடி ஊராட்சியில் பழுதடைந்த துணை சுகாதார நிலையத்தை புதிதாக கட்டித் தர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
லெனின்தாஸ்: டி.மணல்மேடு ஊராட்சி நட்சத்திரமாலை கிராமத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும். காழியப்பநல்லூர் ஊராட்சி செங்கமேடு இணைப்பு சாலை விரைந்து சீரமைக்க வேண்டும். துடரிபேட்டை கிராமத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்து தர வேண்டும்.
கிருபாவதி: கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி பயணிகள் நிழலகம் அருகில் சிமெண்ட் சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும். நல்லாடை ஊராட்சியில் ஈமக்கிரியை மண்டபம் புதிதாக கட்டித் தர வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் சுகாதார துறையினர் உள்பட அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்